×

திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள் தீவிரம்: பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி

திருத்தணி: திருத்தணியில் சாலை விரிவாக்கப் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதை தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் பணிகள் தீவிரப்படுத்தியதால், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருத்தணியில் நெடுஞ்சாலை துறை சார்பில் முக்கிய சாலைகள் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றது.

வாகன நெரிசல் நிறைந்த சென்னை பைபாஸ் சாலைக்கு இருபுறமும் சாலை விரிவுப்படுத்தி நடந்து செல்வோருக்கு வசதியாக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பிவேர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்காக நெடுஞ்சாலை துறை சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தார்சாலைக்கு இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு அதில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்ட நிலையில் பணிகளில் வேகம் குறைந்தது.

இதனால், வாகன ஓட்டிகள் சென்று வர அவதிப்பட்டும், அடிக்கடி பள்ளத்தில் விழுந்து பலர் காயமடைந்து வந்தனர். கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் சென்றுவர முடியாத நிலையில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இதில் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிப்பு குறித்து தினகரன் நாளிதழில் நேற்றுமுன்தினம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் நேற்று 25க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்ளை பணியில் அமர்த்தி சாலை விரிவாக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள் தீவிரம்: பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Tiruthani ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...